துரைமுருகன் மீது புகார்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.  தேர்தலில் பதிவான   வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபுமுருகவேல்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவில், காட்பாடி தொகுதியில் அதிமுக  வேட்பாளரின் வெற்றி  மிகப் பிரகாசமாக  இருப்பதாகவும் இதனால் இறுதி முயற்சியாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி  வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது வாக்குபதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வேண்டும்  என திமுக வேட்பாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என கோரியுள்ள பாபுமுருகவேல்,  தேர்தல் ஆணையம்   விதித்திருக்கக்கூடிய  வழிமுறைகளின்படி வாக்கு எண்ணும் முகவர்கள்,  வாக்கு எண்ணிக்கை நாளன்று அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூடுதலாக மத்திய  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள்  காட்பாடி தொகுதியில் பணியமர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.