கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – அணைத்து தலைவர்களும் வாழ்த்து !

கிறிஸ்துமஸ் தின விழா இன்று வெகு விமரிசையாக கிறிஸ்தவர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.குடியரசு தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துச் செய்தி கூறியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புனித கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு எனது சக குடிமக்களுக்கு குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் அமைதியை நிலைநாட்டவும், மனிதத்தன்மையைக் காக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.இயேசு கிறிஸ்துவின் போதனைகளான அன்பு, இரக்கம் மற்றும் மனிதத்துவத்தை இவைகளை பின்பற்றி நாடு மற்றும் சமூகத்தின் நல்வாழ்விற்காகப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்வோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றாக சேர்ந்து வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கிறிஸ்துபெருமான் மண்ணுலகில் அவதரித்த மகத்தான நிகழ்வாம் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி மகிழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் .

இயேசுபெருமானின் பிறப்பு நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம். இருப்பவர்கள், இல்லாதோருடன் பகிர்ந்து வாழவும், ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, எல்லோரும் இறைவனின் பிள்ளைகளாக அன்பிலும், சமாதானத்திலும் வாழ்ந்திடவும் உறுதி ஏற்று புத்துலகம் படைப்போம்.மலர இருக்கும் 2021 புத்தாண்டில் அனைவருக்கும் நல்லனவெல்லாம் நடைபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கிறிஸ்துவ சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ஏழை, எளிய மக்களுக்கு கருணையுள்ளத்துடன் உதவிடும் ஒரு மிக முக்கியமான உன்னதத் திருவிழா இனிய திருவிழா. ஏழைகளுக்கும் – அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா என்று வாழ்த்தியுள்ளனர் .