2035 வரை ஜின்பிங் தான் சீன அதிபராக தொடர ஒப்புதல்

தற்போதைய சீன அதிபா் ஷி ஜின்பிங், 2035ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், கட்சியின் அரசியல் தலைமை குழு சார்பில் மத்திய குழு உறுப்பினர்கள், அதிபர் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். பின்னர், 2035ம் ஆண்டு வரை ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதேபோல், உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செலுத்துவதற்கான திட்டங்களுடன் கூடிய 14வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றை கவனித்து வரும் ஜின்பிங், அந்த பதவிகளில் ஆயுள் முழுவதும் இருப்பார் என கூறப்படுகிறது.