கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலில் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது .

இதுகுறித்து அந்த செய்திக் குறிப்பில் கூறியது , “இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை மாவட்டம் புலிபட்டி பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.