100% பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கூடாது !

கொரோனா தொற்று பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதியளித்து கடந்த 4ம் தேதி தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தனி மனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடரும்படி உத்தரவிடக் கோரி சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து 2020 டிசம்பர் 31ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் மேலும் திரையரங்குகளில் நூறு சதவீத இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.