கங்கை நதியில் 71 உடல்கள் மீட்பு..!

பீகார் புக்சார் மாவட்டத்தில் சவுசாவில் கங்கை நதியில் உடல்கள் மிதந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 71 உடல்கள் கங்கையிலிருந்து மீட்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்களை மரியாதையுடன் எரிப்போம் என்று புக்சார் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, அலகாபாத்திலிருந்து இந்த உடல்கள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

“உடல்கள் பெரிதாக விட்டன. உப்பி விட்டன. தண்ணீரில் 5-7 நாட்களாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. எங்கிருந்து வந்தன என்பதை விசாரிக்க வேண்டும். இது வாரணாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம்” என்று மாவட்ட அதிகாரி உபாத்யாய தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் உப்பிய உடல்கள் வீடியோவாக வலம் வந்து வைரலாகியுள்ளன. இதனையடுத்து மக்களிடையே கடும் கோபாவேசம் மூண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.யிலிருந்து பீகார் சவுசா 10 கிமீ தூரத்தில்தான் உள்ளது.

முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் உத்தரப்பிரதேசத்திலிருந்து கங்கை நதியில் உடல்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதாக பீகார் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பீகாரில் பாயும் கங்கை நதியில் சுமார் 100 உடல்கள் மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.