பீகார் தேர்தல் – பாஜக பின்னடைவு

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் பாஜக கூட்டணி பின் தங்கியுள்ளது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தலில் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தேஜஸ்வி யாதவ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி இடையேயும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மெகா கூட்டணி 98 -இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 79- இடங்களில் முன்னிலை வகிக்கிறது.