பிச்சை எடுத்து ரூ.2.60 லட்சம் சேமித்து வைத்த மூதாட்டி

ஜம்மு – காஷ்மீரில், பிச்சை எடுத்து வந்த மூதாட்டியின் குடிசையில் 2.60 லட்சம் ரூபாய் சில்லரைகளாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீரின், நவ்ஷேரா மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி, 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து குடிசையிலேயே முடங்கினார். ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர் இல்ல ஊழியர்கள், சமீபத்தில் வந்து இவரை இல்லத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, மூதாட்டியின் குடிசையில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டில் மூட்டை மூட்டையாக சில்லரைகள் கண்டெடுக்கப்பட்டன. 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள், காகித கவர்களின் வைக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்து, மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரூபாய் நோட்டுக்கள் கூடைகளில் அடுக்கப்பட்டன. சில்லரை இருந்த மூட்டை ஒன்று 80 கிலோ எடை இருந்ததாக மாநகராட்சி ஊழியர் தெரிவித்தார்.

இதுவரை எண்ணியதில், 2.60 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடக்கிறது. ‘இந்த பணம் அத்தனையும் 30 ஆண்டுகளாக, மூதாட்டி பிச்சை எடுத்து சம்பாதித்தது. சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபடவில்லை’ என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.