துபாயில் இருந்து ரப்பர் மூலம் தங்கம் கடத்தல் – புனே விமான நிலையத்தில் கைது

துபாயில் இருந்து ரப்பர் மூலம் தங்கம் கடத்தி வந்த பயணியை புனே விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று துபாயில் இருந்து புனே விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது ஒரு பயணியின் பையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த நபரின் பையை சோதனை செய்த போது, அதில் எரேசர் எனப்படும் ரப்பர் அழிப்பான்களுக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ரப்பர் எரேசர்களை அந்த நபர் தனது பையின் கைப்பிடிகளுக்குப் பின்னால் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நபரிடம் இருந்து ரூ.7.89 லட்சம் மதிப்புள்ள 151.82 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரப்பர் மூலம் தங்கம் கடத்திய நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.