Lovers Kidnapped: கோவையில் நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி

Attempt-to-kidnap-in-a-car-by-brandishing-a-knife
நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி

Lovers Kidnapped: கோவையில் நடுரோட்டில் திடீரென காரில் இருந்து இறங்கிய இளம் காதல் தம்பதி, தங்களை காப்பாற்றும்படி கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை-அவினாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னலில் ேநற்று இரவு 9.30 மணிக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென சிவப்பு சிக்னல் விழுந்தது. உடனே வேகமாக வந்த வாகனங்கள் நின்றன. அதில் வேகமாக வந்த கார் ஒன்றும் நின்றது.

மற்ற வாகனங்கள் சிவப்பு சிக்னலுக்காக காத்திருந்த வேளையில் வாகனங்களுடன் வரிசையில் நின்ற காரில் இருந்து ஒரு அபயக்குரல். சிறிது நேரத்தில் அந்த காரின் கதவுகளை திறந்தவாறு ஒரு இளம் காதல் ஜோடி கீழே இறங்கி சிறிது தூரம் ஓடினர். சிக்னல் அருகே ரோட்டில் ஒரமாக நின்று கொண்டு எங்களை காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கூச்சல் போடத்தொடங்கினர்.

உடனே வாகனங்களில் இருந்த சிலரும் வாகனங்களை விட்டு இறங்கி அவர்கள் பக்கம் ஓடி வந்தனர். உடனே அவர்கள் இருவரும் சாலையில் அமர்ந்து கொண்டு தர்ணா செய்வது போல், நாங்கள் இணை பிரியாத காதலர்கள் என்றும், எங்களை பெற்றோர் பிரிக்க நினைக்கிறார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். எங்களுக்கு உதவுங்கள் என்றும் கதறினர். உடனே அங்கிருந்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுங்கள் என்று பேசத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் அந்த சிக்னலில் நின்றுகொண்டு இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அந்த காதல் ஜோடியினர் எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறி அவரின் காலில் விழுந்து கதறினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அந்த இளம்பெண் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கூறும்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பையும் மீறி இன்று தான் (நேற்று) திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்கள்.

மேலும் அந்த இளம் பெண் கூறும்போது, எங்களை சேர்த்து வைப்பதாக கூறி எனது தந்தை காரில் அழைத்து வந்தார். ஆனால் கார் சென்று கொண்டிருந்த போதுதான் எங்களை தேனிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அங்கு சென்றால் எங்களை பிரித்து விடுவார்கள் என்பது எங்களுக்கு பின்னர்தான் தெரியவந்தது.

அதனால் தான் நாங்கள் பயந்து போய், சிக்னலில் கார் நின்றதும், தப்பிக்க முயன்றோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவீட்டாரையும் அழைத்து போலீசார் சமரச பேச்சு வார்த்ைத நடத்தினர். அப்போது இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் தம்பதியை போலீசார் அவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். இளம் காதல் தம்பதியினரும் மகிழ்ச்சியுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர். கோவையில் நடுரோட்டில் இளம் தம்பதி கூச்சலிட்டு கதறிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore Lovers Kidnapped 

இதையும் படிங்க: Holiday Announcement: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை விடுமுறை