திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 17ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா அறிவாலயத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ம் தேதி வரை, விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது 25000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மகளிர் மற்றும் தனித்தொகுதியில் போட்டியிடுவோருக்கு 15000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு அளித்துள்ள தொகுதி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24ம்தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மனுக்களை பெறமுடியும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தோருக்கு 15000, புதுச்சேரிக்கு 5000 மற்றும் கேரளாவுக்கு 2000 ரூபாய் கட்டணத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 21ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



