நீட் மதிப்பெண் குறையும் என அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு அச்சத்தில் ஒரு மாணவரும், நீட் தேர்வெழுதிய மாணவியும் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவி செளந்தர்யா விரக்தியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.