அடுத்த எம்.பி., தேர்தலில் 450 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்- அண்ணாமலை

பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலை செய்கிறோம். 2024 ம் ஆண்டு எம்.பி., தேர்தலில் பா.ஜ., வை எதிர்த்து அரசியல் செய்ய எந்த பெரிய கட்சியும் இல்லை. காங்., கட்சியில் அதிக குழப்பம் உள்ளதால் சிதறியுள்ளது.

அடுத்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது. மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி, தி.மு.க., போன்றவை தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் துணைப் பிரதமராகவும், அவர் மகனை தமிழக முதல்வராக்கவும் காய் நகர்த்தி வருகிறார்.

இருந்தாலும் அடுத்த எம்.பி., தேர்தலில் 450 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். மத்திய அரசின் திட்டங்களை எதிர் கட்சியாக தி.மு.க., இருந்த போது குறை சொன்னது.ஆனால் இப்போது தி.மு.க., அரசு மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்ல முடியாமல் உள்ளனர். தி.மு.க., வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பி ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.