அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி போலி விளக்கை ரூ.1.5 கோடிக்கு விற்பனை

அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முலாம் பூசிய விளக்கை ரூ.1.5 கோடிக்கு விலை பேசிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசித்திர புகார் ஒன்று வந்தது. அதில், அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முலாம் பூசிய விளக்கு ஒன்றை ரூ.1.5 கோடிக்கு விலை பேசி கும்பல் ஒன்று புகார் அளித்த மருத்துவரிடம் விற்பனை செய்துள்ளது என தெரிய வந்துள்ளது.

அந்த புகாரின்படி, இக்ராமுதீன் மற்றும் அனீஸ் என்ற இருவர் உடல்நலம் இல்லாத தங்களது தாய்க்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவரை அணுகியுள்ளனர். இதன்பின்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் வீட்டுக்கு சென்று மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.

இந்நிலையில் பாபா என்பவரை இருவரும் மருத்துவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இந்த கும்பல் ரூ.1.5 கோடி மதிப்புள்ள விளக்கு ஒன்று எங்களிடம் உள்ளது. அது செல்வ வளம், உடல்நலம் மற்றும் நல்ல எதிர்காலம் ஆகியவற்றை வழங்கும். உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்… என கிளப்பி விட்டுள்ளனர்.

இதன்பின் அலாவுதீன் போல் உடையணிந்த ஒருவர் மருத்துவர் முன் தோன்றியுள்ளார். இவை எல்லாவற்றையும் நம்பி மருத்துவர் அவர்களிடம் முதல் தவணையாக ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்று விளக்கை தேய்த்ததில் தூசியே வந்துள்ளது. பூதம் வரவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டு விட்டோம் என உணர்ந்து உடனடியாக போலீசை தொடர்பு கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்க முலாம் பூசிய விளக்கை பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர். இந்த இருவரும் நகரின் பல பகுதிகளுக்கு சென்று வீட்டில் இருப்பவர்களிடம் தந்திர வித்தைகள் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.