வெற்றி நடை போடும் தமிழகமே விளம்பரங்களுக்கு 64 கோடி மட்டுமே செலவு

வெற்றி நடை போடும் தமிழகமே என்ற தலைப்பில் அதிமுக அரசின் சாதனையை விளக்கும் விளம்பரங்களுக்கு 64 கோடியே 72 லட்சம் மட்டும்தான் செலவு செய்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசின் சாதனைகளை குறிப்பிட்டு, வெற்றி நடை போடும் தமிழகமே என்ற பெயரில் விளம்பர படங்களை அதிமுக அரசு வெளியிட்டது. அந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணம் அதிமுகவின் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக திமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயணன் விளம்பரங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யவில்லை என்று வாதாடினார். ஜி எஸ் டி யுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.