28-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரம்

அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே 1998-ல் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அந்த கட்சியின் வெள்ளி விழா மாநாடுதான் அ.தி.மு.க. வெற்றிக்கு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதே போல் தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாடும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந்தேதி தமிழகம் வருகிறார். ஊட்டி ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

அமித்ஷா வருகை உறுதியாகி இருக்கும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. மாநில மாநாட்டில் அகில இந்திய தலைவர் பங்கேற்பது புதிதல்ல. ஏற்கனவே நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் எல்.கே.அத்வானி பங்கேற்றுள்ளார். அந்த வகையில் இப்போது அமித்ஷாவும் பங்கேற்கிறார் என அ.தி.மு.க. மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.