அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை- கடம்பூர் ராஜூ

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து உள்ளது.

அ.தி.மு.க.வில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளப்படுவர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவது நடக்காத காரியம்.

சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் நேற்று அநாகரீகமான வகையில் நடந்து கொண்டனர். அ.தி.மு.க.வில் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக்கொண்டனர்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவு நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அ.ம.மு.க.வினர் ஈடுபட்டார்களா, அல்லது அவர்கள் போர்வையில் வேறு யாரும் ஈடுபட்டார்கள் என்பதை டி.டி.வி. தினகரன் தான் கண்டறிய வேண்டும்.

இதையும் படிங்க: டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு