Comedian Vadivelu: நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா உறுதி

comedian vadivelu
நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா உறுதி

Comedian Vadivelu: நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கமிட்டானார் வடிவேலு. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இதன் பூஜை நடைப்பெற்றதோடு, படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

படத்தின் இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு ஆகியோர் சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்ற Taqpath பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் காணப்படும் s-gene drop-ம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 61-வயதாகும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Director Sethumadavan: தமிழ் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்