நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல, தற்கொலை-எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல, தற்கொலை தான் என்று எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா, தனது அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்த்ரா வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்குப்போட்டுக் கொண்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று பல்வேறு யூகங்கள் கிளம்பின. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய விதமாக சுஷாந்த் மரண விசாரணை மகாராஷ்டிரா – பீகார் மாநில அரசியல் பிரச்னையாக உருெவடுத்தது.

இதுமற்றுமின்றி, சுஷாந்தின் காதலி ரியா உட்பட பிரபல நடிகைகள் போதை பொருள் பயன்படுத்திய வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை கொண்டு ஆய்வு செய்து வந்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் ஆய்வை செப். 29ம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு சமர்ப்பித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை ‘கூப்பர்’ மருத்துவமனையின் அறிக்கையுடன் ஒத்துப்போகின. இதுகுறித்து சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஷ்சிங் கூறுகையில், ‘சுஷாந்த் கொலை செய்யப்பட்டதுக்கான சாத்திய கூறுகள் 200 சதவீதம் உறுதியாகியுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா, ‘இது 200 சதவீதம் தற்கொலைக்கான சாத்தியக்கூறே உள்ளது. இன்னும் விசாரணை முடியவில்லை. அது முடிந்த பின்பே இதற்கான முழு விவரங்களும் தெரியவரும்’ என்று குறிப்பிட்டார்.

சுஷாந்த் சிங் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்கு மத்தியில் தற்போதைய எய்ம்ஸ் அறிக்கைபடி தற்கொலை என்பதே உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here