ஜி.எஸ்.டி., இழப்பீடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 6,000 கோடி பகிர்ந்தளிப்பு

ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பீட்டை சமாளிக்க, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மாநிலங்களுக்கு, மத்திய அரசு நேற்று பகிர்ந்தளித்தது.

இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, சிறப்பு கடனுதவி திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த திட்டத்திற்கு, 21 மாநிலங்களும், இரண்டு யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்தன. இதற்காக, ரூ.1.1 லட்சம் கோடியை கடனாக வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கடனாக வாங்கி, மாநிலங்களுக்கு நேற்று பகிர்ந்தளித்தது.அந்த தொகை, ஆந்திரா, அசாம், பீஹார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட, 16 மாநிலங்களுக்கும், டில்லி, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.