ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பு

2 ஜி வழக்கை விமர்சித்து முதல்வர் பேசியிருந்த நிலையில், அதுகுறித்து விவாதிக்கத் தயார் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, 2 ஜி வழக்கில் ஒரு நாள்கூட, தான் வாய்தா வாங்கவில்லை என்றார். இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என தீர்ப்பு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், அரசமைப்பு சட்டத்தின்மீது நடத்தப்பட்ட படுகொலை என்று நீதிபதி குறிப்பிட்டு இருப்பதாகக் கூறிய ஆ.ராசா, முதல்வர் ஜெயலலிதாவை எவ்வகையிலும் நான் அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும் அவரை ஆத்தா என்று கூறியது வட்டார வழக்கு என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக உதகையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ.ராசாவைக் கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக சார்பாக உதகை காப்பிஹவுஸ் சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில், அவருக்கு கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பிய அதிமுகவினர், அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.