நாகை மீனவர்கள் 23 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு

நாகை மாவட்டம் நாகப்பட்டினம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் குறைந்த அளவிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை சமாந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த முருகையன் (38), குட்டியாண்டி (48), வீரசேகரன், அமிர்தலிங்கம்(38), இளங்கோவன் (48), பாண்டியன் (30), உத்திராபதி (33), தமிழ்வாணன் (48), சிவகுமார் (48), ரவி (44), சாமிநாதன் (20),எழிலரசன் (36), அகத்தியன் (40), சிவராஜ் (35) சிவ சக்திவேல் (32) சம்பத் (40), கந்தன் (40), முருகையன் (35), ஆறுமுகம் (50), வினித் (28), விஜயேந்திரன் (39), சுதாகர் (32), தன்ராஜ் (28) ஆகிய 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் இந்திய கடல் எல்லையான கோடியக்கரை தென்கிழக்கே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன.இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் உடனடியாக தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் இலங்கை ரோந்து கப்பல் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஏன் எங்கள் படகுகளை சுற்றி வளைக்கிறீர்கள். மீன் பிடிக்க விரித்த வலைகள் சேதமாகிறது என்று கேட்டுள்ளனர்.அப்போது அவர்கள் நீங்கள் வலைகளை விரித்திருப்பது இலங்கை நாட்டின் எல்லை. பல முறை உங்களை எச்சரித்தும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறீர்கள்.

எனவே உங்கள் 23 பேரையும் கைது செய்கிறோம் என்று தெரிவித்தனர்.பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக் குதித்த இலங்கை கடற்படையினர், நம் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 23 மீனவர்களையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு காங்கேசன் துறைமுகாம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.