இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்வையிடலாம்

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது.

இந்நிலையில், தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக, வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.