இன்று தொடங்கியது ரமலான் நோன்பு..!

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் தென்படாத நிலையில், இன்று முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

ரமலான் நோன்பை ஒட்டி, இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் தராவீஹ் தொழுகையை, முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி, இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே இஸ்லாமியர்கள் தொழுகையைத் தொடங்கினர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசத் தொடங்கி உள்ளதால் நோய் பரவலை தடுக்க இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தபடியே நோன்பு திறக்கவும், தொழுகைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.