Opening of Sabarimala: சபரிமலையில் வரும் 12ம் தேதி நடை திறப்பு

சபரிமலை: Sabarimala Ayyappan temple opening evening walk on 12th ahead of Masi month puja. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜையை முன்னிட்டு வரும் 12 ம் தேதி மாலை நடை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அவ்வாறு மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12ம் தேதி மாலையில் திறக்கப்படும்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் 13ம் தேதி முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். எனவே அதற்கு முன்னதாகவே காணிக்கை நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

சபரிமலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதன்மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ஆனால் சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் இன்னும் எண்ணி கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. அந்த நாணயங்களை எண்ணுவதற்காக, தேவஸ்தானத்தின் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானம் சென்றனர். இதனையடுத்து காணிக்கை பணத்தை எண்ணும் பணியை தற்போது தொடங்கியுள்ளனர். இதுவரை ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்னதாகவே (பிப்ரவரி 11-ந்தேதி) காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.