No darshan at Sabarimala: சபரிமலை கோயிலில் நாளை முதல் தரிசனம் இல்லை

சபரிமலை: No darshan at Sabarimala temple from tomorrow. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் தரிசனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டின் மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை நடை அடைக்கப்படுவதால், இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோவில் நடை மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை திறக்கப்படும்.

கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிவடைந்த பின்னரும் பக்தர்களின் வருகை குறையாமல் உள்ளது. இதற்கிடையே 14ம் தேதிக்குப் பின்னர் கடந்த 4 தினங்களாக சராசரியாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம் என்பதால் பக்தர்கள் சபரிமலையில் அதிக அளவில் குவிந்திருந்தனர். இந்த மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதனைத்தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். சபரிமலையில் நடப்பு சீசனில் நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.