Mandal Pooja today at Sabarimala: சபரிமலையில் இன்று மண்டல பூஜை; 40,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி

சபரிமலை: Manda Pooja is taking place today at Sabarimala Ayyappan temple. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்ட பூஜை நடைபெறுகிறது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டுக்கான மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 41 நாட்கள் கொண்ட மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் அனுமதிக்கப்பவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது. கடந்த மாதம் சராசரியாக தினமும் 65,000 முதல் 70,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இம்மாதம் தினமும் சராசரியாக 80 ,000 முதல் 90,000 வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.

மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இதற்காக, 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23 ஆம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டு ஓமல்லூர்,ரான்னி, பெருநாடு வழியாக நேற்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது.

பின்னர் பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில், சபரிமலையில் இன்று மதியம் 12.30 மணி முதல் 1 மணிக்கு இடையே ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இரவு 10 மணி வரை இந்த தரிசனத்தை காணலாம். இந்த பூஜையை காண 40,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தது பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.