Subsidized Loans: மானியத்துடன் கூடிய கடனுதவி: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: Youth Call apply for Subsidized Loans: நாமக்கல் மாவட்டத்தில் தொழில்தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு கீழ்காணும் மானியத்துடன் கூடிய மூன்று கடன் திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

  1. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS):
    இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவைசார்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10.00 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5.00 கோடிவரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) மூலம் 25 விழுக்காடு மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 இலட்சம்) நிதியுதவி வழங்கப்படும் (பட்டியல் இனம் / பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்). மேலும் 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புபிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர்/ பிற்பட்டவகுப்பினர்/ மிகவும்
    பட்டவகுப்பினர்/ சிறுபான்மைனர்/ திருநங்கைகள்/ மாற்றுத் திறனாளிகள்/ மகளிர்/ மற்றும் முன்னாள் இராணுவத்தினர்) ஆகியோர்களுக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும் மற்றும் கல்வித் தகுதி பணிரெண்டாம் வகுப்பு அல்லது அங்கீகாரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP):
    இத்திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) மூலம் 25 விழுக்காடு மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம்) நிதியுதவி வழங்கப்படும்.
    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர்/ பிற்பட்டவகுப்பினர்/ மிகவும் பிற்பட்டவகுப்பினர்/ சிறுபான்மைனர்/ திருநங்கைகள்/ மாற்றுத் திறனாளிகள்/ மகளிர்/ மற்றும் முன்னாள் இராணுவத்தினர்) ஆகியோர்களுக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும் மற்றும் கல்வித் தகுதி குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP):
    இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50.00 இலட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.20.00 இலட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினருக்கு 15 விழுக்காடு மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியமும், இதர பிரிவினருக்கு நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீடு உற்பத்தி பிரிவில் ரூ 10.00 இலட்சத்திற்க்கு அதிகமாகவும், சேவைப் பிரிவில் ரூ 5.00 இலட்சத்திற்க்கு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    எனவே தகுதியான விண்ணப்பத்தாரர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரிலோ அல்லது 04286-281251 என்ற எண்ணிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.