Weather Report: இன்று கனமழைக்கு வாய்ப்பு

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Weather Report: தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிரம் அடைந்தது.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

15 மாவட்டங்களில் கனமழை

இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் 12-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிகழ்வால் சில பகுதிகளில் மழை பெய்தாலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தீவிர புயல் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கி.மீ. முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்திலும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோடநாடு 6 செ.மீ., பல்லடம் 5 செ.மீ., பவானிசாகர், கிளென்மார்கன், மேட்டுப்பாளையம், மேட்டூர் தலா 3 செ.மீ., நடுவட்டம், தேன்கனிக்கோட்டை, கல்லட்டி, திருப்பூர் தெற்கு, ஊட்டி, பாலக்கோடு, பாரூர், கெட்டி தலா 2 செ.மீ. உள்பட ஓரிரு இடங்களில் மழை பெய்திருக்கிறது.

‘அசானி’ பெயரை சூட்டிய இலங்கை


ஒவ்வொரு முறை புயல் உருவாகும்போதும், அதற்கு சூட்டப்படும் பெயர் பலரின் ஆர்வத்தை தூண்டும். அந்த வகையில் தற்போது வங்க கடலில் உருவாகியிருக்கும் ‘அசானி’ புயலுக்கு யார் இந்த பெயரை சூட்டியது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது. அதற்கு பதில், இலங்கை என்பதே. ஆம், அண்டை நாடான இலங்கைதான் இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இந்த சிங்கள மொழி சொல்லுக்கு ‘சீற்றம்’ என்று பொருள்.

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு வடஇந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன. அவை ஏற்கனவே வழங்கியுள்ள பெயர்கள் வரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ‘அசானி’க்கு அடுத்தபடியாக உருவாகும் புயலுக்கு சூட்டவிருக்கும் பெயர், ‘சித்ரங்’. இந்த பெயரை வழங்கியிருக்கும் நாடு தாய்லாந்து.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்