Tomato Flu: தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சலா?

தமிழகத்தில் தக்காளி வைரஸ்
தமிழகத்தில் தக்காளி வைரஸ்

Tomato Flu: கேரளாவில் தற்போது பரவி வருவதாகக் கூறப்படும் தக்காளி வைரஸ் என்ற சொல்லப்படுவது புதிய வைரஸ் அல்ல எனவும், கண்ணத்தில் சிகப்பாக தழும்பு வருவதால் தக்காளி வைரஸ் என்ற பெட் நேம் வைத்துள்ளனர் எனவே அந்த வைரஸ் குறித்து பயப்பட தேவை இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியது.

ஆனால் பழைய பாதிப்பு எண்ணிக்கையை தற்போது வெளியிடுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காட்டப்படுவதாக கேரளா சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் அல்லாமல் கேரளாவின் பல மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பீதி கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டது தற்போது மீண்டும் ஒரு வைரஸ் பாதிப்பு அங்கு பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தக்காளி வைரஸ் என புனைப்பெயரிட்டு அழைக்கப்படும் அந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும், குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உடல் வலி கை கால்கள் வெளிர் நிறமாக மாறுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் இருப்பதாகவும் வெயில் காலங்களில் பரவும் அம்மை நோய் போல இது ஒரு புதிய வைரஸ் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த தக்காளி வைரசால் அதிகம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 85 குழந்தைகள் தக்காளி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கும் இந்த வைரஸ் பரவ இருப்பதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் கேரளாவில் தக்காளி வைஸ் என அழைக்கப்படுவது புதிய வைரஸ் இல்லை எனவும் தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Velliangiri Hills: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி