Water release from Chembarambakkam lake: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு

சென்னை: 100 cubic feet per second water release from Chennai Chembarambakkam lake. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து இன்று விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிமீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும், இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (02.11.2022) நீர்இருப்பு 20.64 அடியாகவும் கொள்ளளவு 2764 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் எரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1180 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள நீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி இன்று விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கெட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர் குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.