Tamil Nadu Day, Anti-Hindi rally: சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள், இந்தி எதிர்ப்புப் பேரணி

சென்னை: Tamil Nadu Day, Anti-Hindi rally organized by Naam Tamilar Party in Chennai. சென்னையில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினரின் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரே இந்தி எதிர்ப்பு பேரணி நேற்று மாலை தொடங்கியது. இந்த பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றங்கரை வரை இந்தப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்தாலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கட்சியின் தொண்டர்கள் குடையுடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து கலந்துகொண்ட கட்சித் தொண்டர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் கிடையாது; ஆனால் சொந்த மொழிக்கு உயிராக உள்ளவர்கள். இந்தி மொழியை எதிர்த்து நாம் போராடவில்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்றார்.

மேலும் 400 ஆண்டுகளே ஆகாத இந்தி மொழி; ஒரு இரவல் மொழி. ஆனால் நம் தாய் மொழி தமிழ் இறைவன் தந்த மொழி. சிவபெருமான் தந்த தொன்மையான மொழியாகும். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழ் மொழியில் இருந்து அறிந்து கொள்ளலாம் என பிரதமரே தெரிவித்துள்ளார். பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் மத்திய அரசு, தனது அதிகார வலிமையை கொண்டு நாடெங்கிலும் இந்தியை திணிக்க முற்படுகிறது. இதுபோன்ற இந்தி மொழி பூச்சாண்டி எல்லாம் வேறு எங்காவது கொண்டு போய் காட்டுங்கள்.

இந்தி படித்தால் வடமாநிலத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அப்படியானால் 2 கோடி வடமாநிலத்தினர் ஏன் தமிழகத்திற்கு வந்து வேலை பார்க்கிறார்கள். உழைப்பையும், வேலையையும் நாம் தவறவிடுவதால் அவர்கள் வந்து புகுந்துவிடுகிறார்கள். இப்படியே போனால் நாம் அடிமையாகி விடுவோம். எனவே வடமாநிலத்தில் இருந்து இங்கு வேலைகளுக்கு வருபவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கக்கூடாது என தெரிவித்தார்.

தொடர்பு மொழியாக வேண்டுமானால் ஆங்கிலம் இருந்துவிட்டு போகட்டும். தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும். தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும். அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருந்து வெற்றி காணும். வருகிற 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி முன்னேறி வருகிறோம் எனப் பேசினார்.