Veerapandiya Kattabommans Birthday Party: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்கள் மீது தடியடி

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா இன்று தமிழர்களால் (Veerapandiya Kattabommans Birthday Party) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர். இவரின் பெருமையை போற்றும் வகையில் இன்று பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அதே போன்று கரூரில் ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பாக சைக்கிளில் பேரணியாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கமாகும்.

அந்த சமயத்தில் கழகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியவாறு செல்வது வாடிக்கையாகும். அந்த வகையில் இன்று (ஜனவரி 3) வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி செல்வதற்கு போலீசாரிடம் அனுமதி கடிதம் அளித்திருந்தனர்.

மேலும் கரூரில் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் விதித்துள்ள தடை அமலில் இருக்கிறது. அப்படி இருக்கும் சமயத்தில் சைக்கிள் பேரணி செல்வதற்காக வீரபாண்டியன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் ஒன்று கூடினர்.

இதனையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பேரணியாக செல்லும் போது போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தடையை மீறி பேரணி செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையும் விடுத்தனர்.

ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் பேரணி செல்ல முயன்றனர். இதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஏராளான பொதுமக்கள் கூடும் இடத்தில் போர்க்களம் போல காட்சியளித்தது. பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.