Van accident near Erode: மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற வேன் விபத்து; 3 வயது குழந்தை பலி

ஈரோடு: A 3-year-old child tragically died when a van going to Melmaruvathur temple hit a tree near Anthiyur. அந்தியூர் அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்து.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி, முரளிகாலனி பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார். இவரது மகள் மகாஸ்ரீ (வயது 3).

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சம்பத்குமார் தனது மகள் மகாஸ்ரீ மற்றும் உறவினர்கள் என மொத்தம் 21 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றார்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதியை சேர்ந்த கௌதம் (வயது 27) என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த வேன் சென்னம்பட்டி முரளிபிரிவு என்ற இடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிளம்பிய 15 நிமிடங்களிலேயே நடந்த இந்த விபத்தில் வேனில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சிறுமி மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் வேனில் பயணம் செய்த சம்பத்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வேனிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, வேன் விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் கவிழ்ந்து கிடந்த வேனிலிருந்து அவர்களை மீட்டனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.