Union Minister inspects Chennai Lubricant Project Complex today: சென்னை உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய அமைச்சர் இன்று பார்வை

சென்னை: Union Minister inspects Chennai Lubricant Project Complex today. சென்னை மணலியில் அமைக்கப்பட்டு வரும் இந்திய எண்ணெய் கழகத்தின் நவீன, ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர்ராமேஸ்வர் தெலி இன்று பார்வையிட்டார்.

உலகின் இரண்டாவது பெரிய உயவு எண்ணெய் தொழிற்சாலையாக கருதப்படும் இந்த திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். பொதுவாக இதுபோன்ற பெரிய தொழிற்சாலை பணிகள் உரிய நேரத்தில் முடிவடைவதில்லை. ஆனால் மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது உரிய காலத்தில் திட்டங்கள் முடிவடைகின்றன என்றும் அவர் கூறினார்.

சென்னையில் செயல்படவிருக்கும் இந்த உயவு எண்ணெய் தொழிற்சாலைக்கு சாதகமான பல அம்சங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அருகிலேயே சிபிசிஎல் சுத்திகரிப்பு நிலையமும், குழாய் வழி இணைப்புகளுடன் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுக தொடர்பும் உள்ளன என்றார்.

மேலும் மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும், ஏற்றுமதிக்கும் குவி மையமாக சென்னை இருப்பதால் இயூ தரத்துடனான நவீன உயவு எண்ணெய் தேவையை இந்த தொழிற்சாலை பூர்த்தி செய்யும் என்று அமைச்சர் ராமேஸ்வர் தெலி நம்பிக்கை தெரிவித்தார்.

ரோபோக்கள், தானியங்கி குழாய் பாதை, புதுபிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றுடன் இந்த தொழிற்சாலை முழுமையும் கலத்தல் மற்றும் நிரப்புதல் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து திட்ட வளாக தலைமைப் பொது மேலாளர் திரு எஸ் என் விஜயகுமார், மத்திய அமைச்சரிடம் விவரித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய எண்ணெய் கழகத்தின் செயல் இயக்குனரும், மாநிலத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் தலைவருமான வி.சி.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.