Tsunami Memorial Day: 18வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலில் பால் ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்

சென்னை: கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி கடலோரப் பகுதிகள் முழுவதையும் சுனாமி என்ற பேரலை புரட்டிப்போட்டது. இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மலேசியா உட்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும், வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென்று ஏற்பட்ட ஆழிப்பேரலை வாரிசுருட்டி சென்றது.

மொத்தம் 14 நாடுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த சுனாமிக்கு பலர் தங்களின் உறவுகளையும், நண்பர்களையும் இழந்து இன்று வரையில் சோகத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டிசம்பர் 26ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 18வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவை சென்னை கடற்கரையிலும் சுனாமி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.