Tribal People’s Cultural Festival: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பழங்குடியின மக்கள் கலாச்சார விழா

சென்னை: Tribal People’s Cultural Festival at Rajiv Gandhi National Institute of Youth Development: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பழங்குடியின மக்கள் கலாச்சார விழா நடைபெற்றது.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திருபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று (08.08.2022) பழங்குடியின மக்களின் கலாச்சார பெருமைகளை வெளிப்படுத்தும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியினரான பணியர்கள், சோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் மற்றும் வடகிழக்கு மாநில பழங்குடி இளைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களின் பாரம்பரிய கலை வடிவங்களை வெளிப்படுத்தினர். 600-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பழங்குடியினரின் பெருமைகளையும் கலை வடிவங்களையும் கண்டு களித்தனர். தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இந்த கலை நிகழ்ச்சி உயிர் நாடியாக விளங்கியது.

இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், பழங்குடி மக்களின் கலைப் பொருட்களும், கலை வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பழங்குடியின மக்களின் ஆராய்ச்சி நூல்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன இயக்குனர் ஷிவ்நாத் தேவ், தமிழக பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் உதயகுமார், சமூகவியல் துறையின் இணை பேராசிரியர் சர்மிஷ்தா பட்டாச்சார்யா பேராசிரியர் அன்பு கவிதா பேராசிரியர் வெரோனிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் கோபிநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

தெரிந்துகொள்வோம்:
இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development, RGNIYD), திருப்பெரும்புதூர், தமிழ்நாடு நாடாளுமன்ற சட்டம் எண்.35/2012இன்படி 1993இல் நிறுவப்பட்ட பொதுத்துறை கல்வி நிறுவனமாகும். இது இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவையின் கீழ் இது செயல்படுகின்றது.

இந்த நிறுவனத்தில் இளைஞர் மேம்பாட்டிற்கான பட்ட மேற்படிப்பு திட்டங்களையும் ஆய்வுத் திட்டங்களையும் நல்குகின்றது. மாநில முகமைகளுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும் பயிற்சி திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்றது. நாடு முழுவதும் விரிவாக்கப் பணிகளிலும் பரப்புரை முயற்சிகளிலும் பங்கேற்கின்றது.

நாட்டின் இளைஞர் தொடர்பான நடவடிக்கைகளுக்கான முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திர சங்காதன் மற்றும் பிற இளைஞர் அமைப்புகளுடன் பயிற்சி திட்டங்களை வகுப்பதில் பங்கேற்கின்றது. ஊரக, நகரிய மற்றும் பழங்குடி பகுதிகளில் இளைஞர் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் பயிற்சிகளுக்கு மைய முகமையாகவும் உள்ளது.