Transfer of 76 DSPs: தமிழகம் முழுவதும் 76 டிஎஸ்பி.,க்கள் இடமாற்றம்

சென்னை: Transfer of 76 DSPs across Tamil Nadu: தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பி.,க்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 டிஎஸ்பி.,க்களான கண்ணன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மணிமுத்தாறு உதவி கமாண்டண்ட், சம்பத்- ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு, சுரேஷ்- ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தி்ன் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து உள்ளிட்ட 76 டிஎஸ்பி.,க்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பி.,க்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோசடி நிதி நிறுவனங்களில் பண முதலீடு செய்ய வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் எல்என்எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். இதில் ரூ.1 லட்சம் செலுத்தினால் மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் அளிப்பதாகக் கூறி பலரிடம் முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து, வேலூர் எல்என்எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனம் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு தனி விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல், அதிக வட்டி தருவதாகக் ஆசைவார்த்தைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்களில், தங்களுடைய பணத்தினை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட பணத்தினை முதலீடு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.