Tn Cm Stalin condolences: பிரதமர் மோடியின் தாயார் உயிரிழப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: Tamil Nadu Chief Minister M. K. Stalin has expressed his condolences on the demise of Prime Minister Modi’s mother. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் இரவு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை நிர்வாகமும் அவ்வப்போது சிகிச்சை குறித்த அறிக்கையையும் வெளியிட்டு வந்தது.

பிரதமர் மோடியும் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். விரைவில் குணமடைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு உலகத்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.

துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக. என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயார் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.