Tn CM condoles death of veteran journalist Viswanathan: மூத்த பத்திரிகையாளர் விஸ்வநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: Chief Minister condoles death of veteran journalist Viswanathan. மூத்த பத்திரிகையாளரும், ‘Industrial Economist’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமானஎஸ். விஸ்வநாதன் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த பத்திரிகையாளரும், industrial Economist’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான திரு. எஸ். விஸ்வநாதன் (84) அவர்கள் நேற்று இரவு ஏற்பட்ட திமர் உடல்நலக் குறைவையடுத்து இன்று மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.

சென்னையில் இருந்து வெளிவரும் தொழில்துறை சார்ந்த ‘industrial Economist’ இதழை அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் திறம்பட நடத்தி வந்த விஸ்வநாதன் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழிற்திட்டங்களை ஆழமாக அறிந்து கொண்டு பல கட்டுரைகளை வழங்கியவர் ஆவார்.

வயதை மீறிய சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இயங்கி வந்த அவரது மறைவு ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளராக பணிபுரிந்துவந்த எஸ். விஸ்வநாதன் அவர்கள் (வயது 84) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று (22.10.2022) சென்னையில் மரணம் அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.