Speech competition for students: தேனியில் வரும் 15, 17ம் தேதிகளில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தேனி: Speech competition for students on 15th and 17th in Theni. தேனியில் வரும் 15 மற்றும் 17ம் தேதிகளில் மாவட்ட அளவிலான மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 15.09.2022 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 17.09.2022 அன்றும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியிர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 02.00 மணி முதலும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மேற்குறிப்பிட்டுள்ள நாள்களில் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 15.09.2022 அன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு “தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்” எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு “பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி ! மக்களிடம் செல்” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 17.09.2022 அன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு ” தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்” எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு “தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி

பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவுசெய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-, என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.