Special handloom exhibition: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை

சேலம்: Special handloom exhibition sale on the occasion of National Handloom Day: 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் கைத்தறித் துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைத்தறித் துறை சார்பில் இன்று ஒரு நாள் நடைபெறும் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்இரா.ராஜேந்திரன் ஆகியோர் இன்று (07.08.2022) தொடங்கி வைத்து, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை பார்வையிட்டனர்.

தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் – 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் சுத்த பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், பட்டு அங்கவஸ்திரம், பட்டு சர்ட்டிங், ஆர்கானிக் காட்டன் சர்ட்டிங், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டிகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் கைக்குட்டைகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் உலக தரம் வாய்ந்த வகையில் கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

மேற்படி கைத்தறி இரகங்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி இரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடும் வகையில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.6.00 இலட்சம் மதிப்பிலான கடன் தொகையும், குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் தறிக்கூடம் கட்டுவதற்கு பனமரத்துப்பட்டி வட்டார கைத்தறி குழுமம் மற்றும் நங்கவள்ளி வட்டார கைத்தறி குழுமங்களை சேர்ந்த 21 நெசவாளர்களுக்கு ரூ.8.60 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிகளும், 10 நெசவாளர்களுக்கு தலா ரூ.10,950/- வீதம் ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருந்திய ஜக்கார்டுமின்தூக்கி இயந்திரங்கள் என மொத்தம் 43 நெசவாளர்களுக்கு ரூ.15.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் சரக கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலரும், துணை இயக்குநருமான (கூ.பொ.) .ந.ஸ்ரீவிஜயலட்சுமி, சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் டி.கார்த்திகேயன் உட்பட அரசு துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.