Vallalar Special envelope Released: வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு சிறப்பு தபால் உறை வெளியீடு

சென்னை: A special envelope is issued on the occasion of Vallalar’s triple festival. வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். ஆன்மீகவாதியான வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், “உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, “வள்ளலார் தனிப்பெருங்கருணை” சிறப்பு மலரை

வெளியிட்டு, சுத்த சன்மார்க்கத்தினர் மழையூர் சதாசிவம், சா.மு. சிவராமன், தனலட்சுமி, எம். பாலகிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி
சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, வள்ளலார் முப்பெரும் விழாவில், வள்ளலாரின் “தனிபெருங்கருணை நாள்” முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.