Intelligence Alert: பிரதமர் மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா: உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை: Security threat to PM Modi’s event. பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பிரதமரை வரவேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 1,500 போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.20 மணியளவில், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் காந்திகிராமம் செல்கிறார். இதைனையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, 2,314 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்குகிறார்.

இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். நிகழ்ச்சிக்குப்பின் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், மாலை 4.30 மணியளவில் விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருட்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த காவல்துறையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.