Erode By Election: ஈரோட்டில் அதிமுகவினர் தங்கியிருந்த மண்டபத்திற்கு சீல் வைப்பு

ஈரோடு: Sealing of the hall where the AIADMK was staying in Erode. ஈரோடு மாவட்டம், வைராபாளையத்தில் அனுமதின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்தியதாக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததையடுத்து, அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தொகுதியில், வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும்,கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

குறிப்பாக அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி. உதயகுமார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர் அலுவலகமாக பயன்படுத்தி வருவதாகவும் மண்டபத்தில் பணப்பட்டு வாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மண்டபத்தை சோதனை செய்வதற்காக சென்றனர்.

சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மண்டபத்தில் இருந்த அதிமுகவினரை வெளியேற்றி சீல் வைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அனுமதி இல்லாமல் அதிமுக ஆலோசனை நடத்தியதாக கூறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் சீல் வைத்தார் ‌.