Denial of permission to RSS procession across Tamil Nadu: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை: Denial of permission to RSS procession across Tamil Nadu. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் திருமாவளவன் பேரணிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

மாநிலம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலத்தை நடத்த உள்ளதாக திருமாவளவன் அறிவித்தார்.

இந்த ஊர்வலத்திற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேபோல் திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி (நேற்று முன்தினம்) திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸில், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.