Rs.1000 each for flood affected families: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000: முதல்வர் உத்தரவு

மயிலாடுதுறை: The Chief Minister has ordered to give Rs.1000 each to the flood affected families in Mayiladuthurai district. மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் ஏராளமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு. உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.