Rope car project: சென்னை மெரினாவில் ரோப் கார்: மேயர் தகவல்

சென்னை: Rope car project between Napier Bridge – Lighthouse in Chennai. சென்னை நேப்பியர் பாலம் – கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சியில் முன்மொழியப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், 37 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 5 நகர்ப்புற சமுதாய நல்வாழ்வு மையங்களின் பெயர்களை திருத்தி அமைக்கும் தீர்மானம், கரூர் வைசியா வங்கியின் மூலம் அம்மா உணவக தினசரி விற்பனைத் தொகையை வசூலிப்பதற்கான ஒப்பந்த நீட்டிப்புக்கான தீர்மானம், சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் வசதி வளாகத்தை மேம்படுத்தும் பணிக்கான நிர்வாக அனுமதி அரசிடம் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் 3 மண்டலங்களில் 372 இடங்களில் ரூ.429.73 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் நவீன கட்டணக் கழிப்பறைகள் அமைக்கும் தீர்மானமும், கல்வி நிறுவன கட்டடங்களுக்கு 1.6 மடங்கு வரி நிர்ணயம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, 101 வது வார்டு உறுப்பினர் செம்மொழி, மெரினா கடற்கரையை ஒட்டி நேப்பியர் பாலம் – கலங்கரை விளக்கம் ரோப்கார் போடும் திட்டத்தை முன்வைத்தார். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று ரோப்கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.