Ramadoss Tweet about china Ship: இலங்கையில் உளவுத்துறை கப்பல்; மிகப்பெரும் நம்பிக்கை துரோகம்: ராமதாஸ்

சென்னை: Ramadoss Tweet about china Ship: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதியளித்துள்ளது மிகப்பெரும் துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் தேதி, சீன நாட்டின் உளவு கப்பல் யுவான் வாங்-5 இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாகவும், வரும் 17ம் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்றும் எரிபொருள் நிரப்புவதற்காக அக்கப்பல் வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த கப்பலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, செயற்கைகோள்களை கண்காணிக்கும் அதிநவீன வசதிகள் இருப்பதால் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இதனையடுத்து, கப்பலின் வருவதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியது. இந்தியாவின் எதிர்ப்புக்கு சீனா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம். எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

மேலும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்து விட்டது. எதிர்பார்த்தபடி, சீன உளவு கப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வரவில்லை. அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அக்கப்பல் காத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சீன உளவு கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்தது.சீன கப்பலின் வருகையை ஏன் எதிர்கிறது என இந்தியா சரியான காரணத்தை கூறவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியான நிலையில் அம்பந்தொட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதையடுத்து சீன உளவு கப்பலின் நகர்வை இந்தியா கூர்ந்து கண்காணித்து வருகிறது. 2007ம் ஆண்டு கட்டப்பட்ட யுவான் வாங்க் 5 உளவு கப்பல் 11,000 டன் பொருள்களை வைத்திருக்கும் திறன் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (Dr. Ramadoss, PMK Founder) தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.