புதுவை: Rally in puducherry : புதுவை மின்துறை தனியார் மையத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாநில அரசும் துணை போகிறது என்று கூறி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், புதுவை மாநிலத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகிலிருந்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனப் பேரணி புறப்பட்டனர். பேரணியில் இருந்தவர்கள் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி வழியாக புதுவை ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். பேரணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் திரண்டு வந்திருந்தனர். புதுவை மின்துறை தனியார் மையத்தை கைவிட வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்றவர்களை இரும்பு வேலிகளை அமைத்து போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.

இதனால் பேரணியில் இருந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆக்ரோஷமாக குரல் எழுப்பினர். பேரணியையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட்டால் மட்டுமே எங்களின் போராட்டம் ஓயும் என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகளின் பேரணியில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அமைத்துள்ள பகுதியில் பதட்டம் நிலவியது.



